அரவணைப்பு
நாமெல்லாம் தொடர்ந்து அதுவும் ஒரே நாட்களில் பல முறை அரவணைப்புகளை பெற்று வளர்ந்திருக்க மாட்டோம். அதற்காக நமது பெற்றோர்களுக்கு நம் மீது அன்பு இல்லை என்று சொல்லவில்லை. அந்த அன்பு உடல் மொழிகளாக வெளிப்பட்டிருக்காது. அதனால் நமக்கும் அரவணைப்பை நமது குழந்தைகளுக்கு கொடுப்பதில் தயக்கம் இருக்கலாம்.
உலகத்துல இருக்கிற ஒவ்வொரு உயிரினமும் அதோட குட்டிகளுக்கு அரவணைப்புகளை கொடுத்துக்கிட்டு இருக்கு. வீட்டுல வளர்கிற நாய், பூனை, ஆடு மாடுகளாக இருக்கட்டும், பறவைகள், காட்டு விலங்குகள் என்று எல்லாமே அதன் அன்பை வாய் மொழிகளோட நிறுத்தாம உடல் மொழிகளாகவும் காட்டுகிறது.
எந்த உயிரினமும் எப்போதும் அரவணைப்பை கொடுத்து கொண்டே இருப்பதில்லை. குட்டிகள் வளர வளர அந்த அரவணைப்பு குறைகிறது. அதன் குட்டிகள் தனியாக வாழ தயாராகவும் அதன் அரவணைப்புகள் நின்று விடுகிறது.
இந்த அரவணைப்பு நாம் குழந்தைகளுக்கு கொடுப்பது காப்பீடு போன்றது. வாய் மொழி வழியாக கொடுக்கும் அரவணைப்பு அவர்கள் மீது நாம் காட்டும் அன்பை முழுவதுமாக கொண்டு சேர்ப்பதில்லை. நான்கு வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு நாம் சொல்வது கட்டளையா, அன்பா, கண்டிப்பா என்று வேறுபடுத்தி பார்க்கிற அளவிற்கு தெரியுமா என்பதே சந்தேகம்.
குழந்தைகளின் உணர்வு திரும்ப சார்ஜ் செய்துகொள்ளப்படும் பேட்டரி போன்றது. ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் நமது இருப்பை நிமிடத்திற்கு ஒருமுறை எதிர் பார்ப்பர். எங்கு இருந்தாலும் நம்மை தேடி வருவர்.நம்மை ஒரு காந்த புலம் மாதிரி சுற்றி சுற்றி வருவர். இரண்டு வயதாகும் போது, நம்மை தேடி வருவது சற்று குறைந்து அவர்களாக ஒரு மணி நேரம் நம்மை தேடாமல் விளையாடுவார்கள். அவர்களின் அன்பு என்ற பேட்டரி சார்ஜ் தீர்ந்தவுடன் நம்மை தேடி வருவார்கள். இப்படியே வயது கூட கூட இந்த தேடல் குறையும். அதற்காக இனி அவர்களுக்கு இந்த அரவணைப்பு தேவை இல்லை என்பது அல்ல. எவ்வளவு வயதானாலும் அன்பென்ற பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டும். இது ஒரு அச்சய பாத்திரம் போன்றது. நிறைந்தால் அற்புதங்களை பார்க்கலாம். அது எவ்வளவு வேகமா, ஆழமாக, அழுத்தமாக அது நிரப்ப படுகிறது என்பதே இங்கு கேள்வி.
குழந்தைகளுக்கு பெற்றோராகிய நாம் நிரப்பாவிட்டால், என்றாவுது ஒரு நாள் அது நிரம்பும் என்ற ஏக்கத்துடனும், வேறு யாரிடமாவது அன்பு கிடைத்தால் அவர்களிடமும் அவர்கள் மிகவும் நெருங்கி பழகுவர்.
நண்பர்களிடமும் ஒரு விதமான தோழமை அன்பு கிடைக்கும். பெற்றோரின் அன்பு, உறவினர்களின் அன்பு என்று சமச்சீரான அன்பாக கிடைக்க பெற வேண்டும்.
