பழக்கப்படுத்தல்

குழந்தைக விளையாடுறதுக்கான விளையாட்டு மைதானம் வீட்டுல இருந்து 2 கிலோமீட்டர் தூரத்துல  இருக்கு. நேற்று எல்லாரும் போயிருந்தோம். இதற்கு முன்னாடி பலமுறை போயிருந்தாலும், குழந்தைகளுக்கு சலிப்பே தட்டாத அளவிற்கு விளையாட்டு சாதனங்கள் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. சலிப்பு குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் சேர்த்துதான். எங்களுக்கும்ன்னு நான் சொன்னது பிள்ளைங்க விளையாடுறத வேடிக்கை பார்க்கங்க.

இந்த விளையாட்டு மைதானம் 1995 ஊர்க்காரங்க எல்லாம் சேர்த்து பணம் சேர்த்து கட்டி இருக்காங்க. பல அமைப்புகள் கொண்ட ஒரு நகரம் போன்ற அமைப்பு. கடற்கரை, கடை தெருக்கள், வீடுகள், இசைக்கருவிகள் மற்றும் அதை இசைப்போர் இசைக்கும்போது பலர் அமர்ந்து கேட்கும் படியான அமர்வு இடம், கப்பல், மகிழ்வுந்து, சிலந்தி வலைப்பின்னல், பாறை ஏற்றம், சறுக்கு, தொடர்வண்டி, கடை போன்ற அமைப்பு, திரையரங்கம் போன்ற அமைப்பு. அவை அனைத்தும் மரங்களால், வண்டியின் சக்கரங்களால் உருவாக்க பட்டிருக்கிறது. கடை போன்ற அமைப்புல, கடைக்காரர் போல நடிக்கத்தான் எத்தனை குழந்தைங்க வரிசையில நிற்க்குதுங்க. அறிமுகம் ஆகாத குழந்தைங்ககூட தனக்கு என்ன வேணுமுன்னு வரிசைபோட்டுக்கிட்டு நின்னு, தான் சொன்னது வாங்கறது மாதிரியும், அதற்க்கு காசு குடுக்கற மாதிரியும், என்ன ஒரு தத்ரூபமான நாடகம். ஒத்திகையற்ற நாடகம்.

இவை அனைத்துமே மரம் மற்றும் ரப்பர் சக்கரத்தால் கட்டப்பட்டிருக்கிறது. அத்தனையிலும் குழந்தைங்க உள்ள புகுந்து விளையாடலாம். இதனை கட்ட நன்கொடை கொடுத்த அனைவரோட பெயரையும் இந்த மைதானத்தை சுற்றி மர பலகையால வேலி அமைத்து ஒவ்வொரு பலகையிலும் அவர்களோட பெயர் பதிய பட்டு இருக்கிறது. அதன் சில படங்கள் இங்கே,








பசங்க விளையாடிகிட்டு இருக்கும் போது நமக்கு என்ன வேலை, எதாவுது பராக்கு பார்த்துகிட்டு இருக்க வேண்டியதுதான்

ஒவ்வொரு விளையாட்டு சாதனங்களிலும் வியக்கும்படியான நேர்மைகளும், ஒழுக்கங்களும். ஒரு குழந்தை ஊஞ்சலில் விளையாடுகிறது என்றால், அடுத்த குழந்தை விளையாட வந்து நின்றவுடன் சிறிது நேரத்தில் விளையாடும் குழந்தை இறங்கி அடுத்த குழந்தைக்கு இடம் விடுகிறது. அதே குழந்தை தனக்கும் மறுபடியும் விளையாட தோன்றினால் திரும்பச் சென்று வரிசையில் நிற்கிறது. தான் முதலில் இதில் இடம் பிடித்தேன், அதனால் இது தனக்குத்தான் என்ற வெளிப்பாடே கொஞ்சம் கூட தெரியல. எனக்கு ஒரே ஆச்சர்யம்

சறுக்கில் எந்த ஒரு குழந்தையும் இறங்கும் பகுதியில் இருந்து ஏறவில்லை, அனைத்தும் பின் பகுதி படிகளில் ஏறுகின்றனர்.ஒரு சில குழந்தைகள் இதற்கு மாற்றாக இருந்தாலும், மற்ற குழந்தைகளை பார்த்து இவர்களும் பின் பக்கமாக சென்றனர்

இன்னும் உற்று கவனித்தால், இந்த பழக்கத்தை ஏதோ ஒன்று உந்திக்கொண்டு இருக்கிறது. அந்த உந்து சக்தி என்ன? பத்து குழந்தைகள் விளையாடுற இடத்துல, ஒன்று இரண்டு பெரியவர்கள் நிற்கின்றனர். மற்ற குழந்தைகளுடன் கூட வந்தவர்கள் சிறிது தள்ளி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். அந்த ஒன்று இரண்டு பெரியவர்கள், சிலர் தாத்தா பாட்டிகளாகவோ, பெற்றோர்களாகவோ, குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் ஆயாக்களாகவோ அல்லது குழந்தைகளை கவனிக்கும் மையங்களில் பணியாற்றுபவர்களாகவோ இருக்கின்றனர். ஒவ்வொருவரும் அவர்களது குழந்தைகளின் மீதான புரிதலின் படி கூடச்செல்கின்றனர்

சிறு குழந்தையாக இருக்கும் பட்சத்தில், அல்லது கொஞ்சம் குறும்புக்காரா குழந்தை என்று. எப்போ எல்லாம் அவர்களது குழந்தை சறுக்கில் எதிர் புறமாக ஏறுகிறதோ, விட்டு கொடுக்காமல் இருக்கிறதோ பணிவுடனும், அமைதியாகவும் சொல்லும் பொழுது அதைகேட்க்கும் மற்ற குழந்தைகளும் விட்டு கொடுக்கின்றனர். இதில் விதிவிலக்குகள் இருக்கிறது. பெரும்பாலானவை விட்டுக்கொடுப்பவர்களா இருக்கும்  பட்சத்தில்  விதிவிலக்குகள் தெரியவில்லை. அல்லது மற்ற குழந்தைகள் விதி விலக்கான குழந்தைகளிடம் இருந்து போட்டி போட்டுக்கொண்டு இல்லாமல் ஒன்று இல்லை என்றால் அடுத்தது என்று நகர்ந்து விடுகின்றனர்.

இங்கு வந்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடமும்,  சாதனங்களும் உள்ளது. அதனால் குழந்தைகளின் உளவியல் பற்றாகுறையால் பாதிக்கவில்லை. அவர்களின் மனதை பகிர்தலில் மட்டுமே நல்வழிப்படுத்தப் படுகிறது.


Popular posts from this blog

பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை(Bronx Zoo)

படமும் குழந்தைகளும்