பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை(Bronx Zoo)
இரெண்டு வாரத்துக்கு முன்னாடி நண்பர் குடும்பமும் நாங்களும் பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை(Bronx
Zooக்கு) சென்றிருந்தோம். நாங்க இருக்கற
இடத்துல இருந்து
90 கிலோமீட்டர் தூரம். 265 ஏக்கர் பரப்பளவு.
நியூயார்க் நகரத்துக்குள்ள பிராங்க்ஸ்ன்ற நகரத்துல இருக்கு. இதன்
நடுவுல் பிராங்க்ஸ்
ஆறு ஓடுது.
அதனாலயே இந்த
காட்சியகத்துக்கு பிராங்க்ஸ் மிருக காட்சியகமுன்னு பெயர். மொத்தம் 6000
வகையான உயிரினங்கள். குழந்தைகள் பூங்கா, மனிதக் குரங்கு குடம், ஆசிய
உலக காடுகள், பட்டாம்பூச்சி தோட்டம், கடல் சிங்கம், மடகாஸ்கர் பகுதி விலங்குகள், 4 பரிமாண திரையரங்கம், வண்டு சவாரி, டைனோசர் சவாரி, ஒட்டக சவாரி என்று குழந்தைகளுக்கு மனம் நிறைய, கால்கள் சலிக்க அலைந்து திரிய நல்ல இடம்.
எப்போ வெள்ளிக்கிழமை வரும் எதாவுது ஒரு படம் பார்த்துட்டு சனிக்கிழமை காலையில எட்டு மணி வரைக்கும் இழுத்து போர்த்திக்கிட்டு தூங்கலாமுன்னுதான் தோன்றும். வழக்கத்து மாறா நேரமே எழுந்து, காலை, மத்தியச் சாப்பாடும் கட்டிக்கிட்டு குழந்தைகளை கிளப்பி 10 மணிக்கு காட்சியகத்தை திறக்கற நேரத்துக்கு வந்தாச்சு. எங்களுக்கு இது மூன்றாவுது முறை. சென்ற வருடம் கோடை காலத்துல வந்தோம். உஸ்ஸ்ப்பான்னு ஆயிடுச்சு.அவ்வளவு வெயில். சென்ற வருடம் வருவதா திட்டமிட்டிருந்தப்ப இதை ஒரு நாளல்ல பார்த்து முடிக்க முடியாது, எதற்கும் வருடாந்திர சாந்தவாக வாங்கலாம் என்று வாங்கியது கலவாதியாகம இருந்தது.
எத்தனை முறை போனாலும் சலிக்காது. அவ்வளவு இருக்கு, பார்க்க பார்க்க இன்னும் கொஞ்சம் நேரம் நின்னு பார்க்க தோணும். பார்க்கிற பக்கம் எல்லாம் மயில் தோகையைவிரித்து நடனமும், சிங்கம், புலி எல்லாம் உங்க பக்கத்துலயே உலாவிக்கிட்டும், பறவைகள் அனைத்தும் பார்க்கும் தொலைவில் அமர்ந்தும், பார்க்க போன அத்தனை பிரிவிலும் விலங்குகள் விளையாடிகிட்டும், உணவு உண்டும், ஒன்றை ஒன்று கொஞ்சிக்கொண்டும் இருந்தால் யாருக்குத்தான் சலிப்பு தட்டும்.
மிருகக்காட்சிசாலையில நிறைய தன்னார்வர்கள், பகுதி நேர வேலையாட்கள் பணியில் இருக்கின்றனர். இங்க என்னை கவர்ந்தது ஒவ்வொரு சவாரிகளிலும் அங்க இருக்கும் விலங்குகளை பற்றி விளக்கம் கொடுப்பார்கள். உதாரணத்துக்கு மோனோரயில் சவாரி அதற்கு பெங்காலி எக்ஸ்பிரஸ்ன்னு பெயர், 20 நிமிட பயணம். ஆசிய விலங்குகள் இருக்கும் பகுதிகளை சுற்றி வரும். இரயிலை இயக்குபவர் ஒவ்வொரு வனவிலங்குகளை கடக்கும் போதும் அதன் தனி சிறப்புகளை, விஷயங்களை பகிர்ந்து கொண்டே வருகின்றனர். அந்த விளக்கம் நமக்கு உயிரினங்களை பற்றி தெரிந்து கொள்ள இன்னும் உதவியா இருக்கு. மார்க்கோர் காட்டு ஆடு இருந்தது, அதுல நாலு ஆடுங்க நல்ல வயசான ஆடுங்க. அந்த ஆடுகளோட வயசு, எது அதுங்களோட குட்டி, எது குட்டியோட குட்டி, எங்க இருந்து கொண்டு வந்தாங்க, எப்ப கொண்டுவந்தாங்க, அந்த ஆடுகளுக்கு என்ன பெயர் வெச்சிருக்காங்க, இப்படியெல்லாம் மூச்சு விடாம சொல்லிகிட்டே வந்தாங்க. கேட்க கேட்கஅங்க இருக்கிற ஒவ்வொரு விலங்குகளை பற்றியும் இன்னும் தேடி தேடி அறிந்துகொள்ள தோன்றுகிறது.
அதே போல மயில் பத்தி சொல்லியே ஆகனும். இந்தியா, ஸ்ரீலங்கா நாடுகள்ல வெப்பமான பகுதிகள்ல வாழற பறவை. இங்க எடுத்துக்கிட்டு வந்து மக்களின் பார்வைக்காக விட்டிருக்காங்க. மற்ற பறவைகள் மாதிரிதான் இதையும் ஒரு கட்டிடத்துக்குள்ள செயற்கையாஅதற்கான தட்ப வெட்பநிலையை உருவாக்கி வளர்த்திருக்காங்க. மற்ற விலங்கினங்களை கண்காணிக்கிற மாதிரி இதையும் கண்காணிச்சதுல, தன் பிறப்பிடத்துல இருந்த மாதிரியே இங்கையும் இருந்திருக்கு. ஒவ்வொரு விலங்கினமும் அதனது பிறப்பிடத்தின் தனித்துவத்தை எதிர் பார்த்து, கிடைக்காத பட்சத்தில் இறந்தும் போகும். பிறப்பிடத்தில் இருப்பதை போல வளர்ந்ததால ஒரு பிரிவுல அடைச்சு வைக்காம திறந்த வெளியில விட்டு முயற்சி செஞ்சிருக்காங்க. இப்போ மயில் மிருகக்காட்சிசாலையின் எங்கும் இருக்கு. பனி காலத்துலக்கூட மயிலுக்குன்னு எந்ததங்குமிடம் செய்யறது இல்லையாம்.அவைகளே தேவையான இடத்தை தேடி தங்குகின்றன. சில சமயம் பூங்காவ விட்டு வெளியில போடுறதா செய்திகள் வெளியாக்கிருக்கு.
போன வருடம் சென்றதிற்கும், இந்த வருடம் விலங்குகளை நன்றாக பார்க்க முடிந்தது. சென்ற வருடம் விலங்குகள் அனைத்தும் நிழல் இருக்கும் இடத்தில் படுத்திருந்தன அல்லது அதன் தங்குவதற்க கட்டி வைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் படுத்திருந்தன. இந்த வருடம் இளவேனிற் காலம்ன்றதால விலங்குகளும் வெளியில் இருந்தன. காலையில இருந்து சாயங்காலம் வரைக்கும் நடந்து பார்த்துகிட்டே இருந்தோம். யாருக்கும் களைப்பே இல்ல. அங்க இருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு.














