குழந்தையும் உறக்கமும்,

எங்க வீட்டுல சின்னவன் சீக்கரம் தூங்கிட்டா ஒரு பெரிய வேலையே முடிஞ்ச மாதிரி இருக்கும். அவனோட வழக்கம், மதியம் 2.30 மணிக்கு ஸ்கூலருந்து வந்தா கொஞ்ச நேரம் விளையாடிட்டு, 3-3.0 மணி போல  தூங்கினா, 5 மணிக்கு எழுந்திரிச்சு பக்கத்து வீட்டு பசங்களோட, அண்ணனோட விளையாடிட்டு குளிச்சிட்டு, சாப்பிட்டு மறுபடியும் நாங்க எல்லாம் தூங்க போற வரைக்கும் எதாவுது விளையாடிகிட்டு இருக்க வேண்டியது. வீடே அமைதியா போகும். சாயந்திரம் குட்டி தூக்கம் போடாமநாள்ல எல்லாம்,  இராத்திரிக்கு எப்படா சாப்பிட்டு தூங்குவான்னு தோணும். ஒரே ஆட்டம், இல்லைனா அழுகை, கோவம், பெரியவனை துரத்துவது, சாப்பிடும் போது எதாவுது இரகளை. உஸ் அப்பாடான்னு தோணும்..


நமக்குமே ஒருநாள் தூக்கம் தடைபட்டால், அடுத்தநாள் எதுவுமே யோசிக்க தோணாது. படுத்தாலும் ஆழ்ந்த உறக்கம் வராது. சில சமயம் நல்லா உறங்கி விடுவோம். எந்தெந்த சமயங்களில் நல்லா உறங்கினோம், எப்போதெல்லாம் அரை குறையா தூங்கினோம் என்று யோசித்து பாருங்கள்.

சில குழந்தைகளுக்கு நல்லா தூக்கம் வந்திரும் ஆனாலும் விழிப்பாகவே இருப்பாங்க. தூக்கத்தை கட்டுப்படுத்திகிட்டு இருக்க முடியாம தவிப்பாங்க. ஆனா தூங்க மாட்டாங்க. இதெல்லாம் ஏன், தூக்கம் வந்தா தூங்கிட வேண்டியதுதானேன்னு நமக்கு தோணும்.

கிராமத்துல இன்னும் நாமக்கல், திருச்செங்கோடு பக்கம் எல்லாம் யாராவுது இறந்திட்டா பெரிய ஒலிபெருக்கி வைத்து சோகமான சினிமா பாட்டு இசைக்க விடுவாங்க. 15-20 வருசத்துக்கு முன்ன, ஒப்பாரி பாடுறத அப்படியே ஒலிபெருக்கியில கேக்கற மாதிரி வெச்சுடுவாங்க. இராத்திரி பாடிகிட்டே இருப்பாங்க. அந்த சத்தம் கேட்டா அடுத்த நிமிஷம் எனக்கு விழிப்பு வந்திரும். அதுக்கு அப்புறம் தூக்கமே வராது. ஒரு மாதிரி பயம், வேதனை, அழுகை, ஆற்றாமை அந்த உணர்வை சொல்ல முடியல.  சில முறை அழுதிருக்கிறேன். சினிமா பாட்டு போடா ஆரம்பிச்சதிலிருந்து அந்த உணர்வு கொஞ்சம் இல்ல. இது அந்த குரலின் வலிமைதான். ஒப்பாரிய ஒலிபெருக்கி வழியா கேட்டாலும், நேருல சொல்லி அழுற மாதிரி இருக்கும். உங்கள்ல எத்தனை பேருக்கு அப்படி தோணுச்சுன்னு தெரியல.

அவுங்க சிந்தனையில என்னால தூக்கத்தை கூட கட்டு படுத்திடுவேன், ஆனா என்ன சுத்தி நடக்கிற சிறு கேளிக்கைகளையும் விட மனசு வராம சுத்திக்கிட்டு இருப்பாங்க. இரவு கல்யாணம், பிறந்தநாள் விழா, நண்பர்கள் வீட்டுல விளையாட போயிருந்தா அங்க எவ்வளவு நேரமானாலும், தூக்கமே வராது. இது எல்லாமே அந்த சந்தோஷமான விளையாட்டுகள் எதையும் தவறவிட மனசு இல்லாமதான் அப்படி இருப்பாங்க. அந்த இடத்துல இருந்து கிளம்பி பஸ்ஸுலையோ, வண்டியிலையோ போனா இரண்டாவுது நிமிஷம் தூங்கிடுவாங்க. அது எந்த வயசு குழந்தையா இருந்தாலும் அதுதான். இங்க எல்லாம் சந்தோஷமான பேச்சுக்கள், சிரிப்பு சத்தங்கள்,  அலங்காரங்கள் ஒரு குழந்தைய மனசுக்கு சந்தோசம் தர கூடிய விஷயங்களா இருந்து மனதை திருப்பதி படுத்தும். அங்க இருந்து மன நிறைவோடு கிளம்பினா அந்த ஆனந்தமான மனது நிம்மதியான தூக்கத்திற்கு உறுதுணையா இருக்கும்.


  • ஒரு அடி வெச்சா அப்படியே அழுதுகிட்டே தூங்கிடுவான்,
  • வாடா கண்ணு நான் உன் பக்கத்துல தூங்குறேன்னு நாமளும் சத்தமே இல்லாம கட்டி அணைத்து தூங்கணும், 
  • நாளைக்கு ஸ்கூல் இருக்கு போய் படுத்து தூங்கு என்று மிரட்டி,
  • சத்தம்போடாம தூங்கு இல்லைனா பூச்சாண்டி வந்துடுவான்,
  • நல்ல கதையின் மூலம் அவர்களின் உலகத்தில் நாமளும் அவர்களும், அப்படியே தூக்கம்..


இதுல எதை பெரும்பாலும் செய்கிறோம்?

1-3 வயசு குழந்தைகளை தூங்க வைக்க சிலர் படாத பாடு படுவோம், தோள்ல போட்டு நடப்போம், மடியில போட்டு ஆட்டுவோம், தொட்டில்ல போட்டு ஆட்டுவோம், சில குழந்தைகள் ஒரு மணி நேரம் ஆனாலும் முழுச்சிகிட்டே இருப்பாங்க. அவுங்கள எப்படி தூங்க வைக்கிறதுங்கிறதே ஒரு விடை தெரியா கேள்வியா இருக்கும். உடலும் மனசும் சந்தோசமா இருந்தாலே அவர்களுக்கு தூக்கம் வரும், வந்தாலும் ஆழ்ந்து தூங்குவாங்க. கீழ இருக்கற குறிப்புகளை முயற்சி செய்து பாருங்கள், பலனை பகிருங்கள்.

1. நடைமுறை ஒழுங்கு - மனதளவில் அவர்களை தயார் படுத்திக்க உதவும். சாப்பிட்ட பிறகு என்ன செய்ய போறோம், வீட்டு பாடத்துக்கு அப்புறம் என்ன என்று அவர்களின் மனது பக்குவப்படும்.
2. உடல் அசைவு சார்ந்த விளையாட்டு - ஓடி ஆடி விளையாட செய்யுங்கள்.
3. தூங்க போகும் முன் நல்ல கதை / பாட்டு - அவர்களின் மனதை சாந்த படுத்தும்.
4. மெலிதான நமது குரல் கேட்கும் இடத்தில் உறங்க வைப்பது. - நாம் அவர்களுடன் தான் இருக்கிறோம் என்பதை உணர்வர். சத்தமே இல்லாத இடத்தில் பழக்க படுத்திவிட்டால், சிறு சத்தத்திருக்கும் பயந்து எழுவார்கள்.

குழந்தைகளின் மனம் அறிவோம் அவர்களின் உலகில் நாமும் வாழ்வோம்!!

Popular posts from this blog

பழக்கப்படுத்தல்

பிராங்க்ஸ் மிருகக்காட்சிசாலை(Bronx Zoo)

படமும் குழந்தைகளும்