அன்பின் வெளிச்சம்...

ஒன்றுக்கு மேல குழந்தைங்க இருக்கிற வீட்டுல காலையில எழுந்தவுடேனே நாட்டாமை சொம்பு வெச்சுக்கிட்டு உட்கார வேண்டியிருக்கலாம்.இரண்டு குழந்தை இருந்தா நல்லா இருக்குமுன்னு நெனைக்கறவங்க,இதை பார்க்கிற ஒரு சிலர்,  இல்ல இல்ல, ஒரு குழந்தைய நல்லா வளர்த்தா போதும்மென்ற மனநிலைக்கு வந்திடுறாங்க.

"நீ பெரியவன், அவ சின்ன குழந்தைதானே பொம்மைய அவள் கிட்ட கொடு", "இவ்வளவு பெரியவனாயும்   இன்னும் அவன் கூட சண்ட போடுற", "அவள் சின்ன குழந்தை அவள் முதல்ல விளையாடுட்டும்" இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் வீட்டுல சிறு விசயத்திற்குச் சொல்ல கூடிய வார்த்தைகள் அவர்களின் மனதை காயப்படுத்தும். இதில் என்ன காயப்படுத்த இருக்குன்னு நாம நினைக்கலாம். அந்த மூத்த குழந்தையாக உங்களை கற்பனை செய்து கொள்ளுங்கள்.அதில் நீங்கள் விளையாடிக் கொண்டு இருக்கும் போது அதை வேறு ஒருவரிடம் கொடுக்க சொன்னால், நீங்கள் வயதில் மூத்தவன் என்பதற்காக கொடுக்க தோன்றுமா!! அதை முழுமையாக விளையாடி அனுபவிக்கவே தோன்றும் இல்லையா!! பெற்றோர் சொல்கிறோம் என்பதற்காக விட்டு கொடுத்தாலும் மனதளவில் சில சமயம் இளையவனி(ளி)ன் மீது  பொறாமையும் ஒரு விதமான இடைவெளியையும் உருவாக்கும்.

இரண்டாவுது குழந்தை பிறக்கும் முன் நமது முழு அன்பையும் அரவணைப்பையும் பெற்று, ஒரு கட்டத்தில் அதை பங்கு போட இன்னொருவர் வந்தவுடன் முதல் குழந்தைக்கு ஒரு சிறு ஏக்கம் வந்துவிடுகிறது. அது இரண்டாவுது குழந்தை பிறந்தவுடன் அவனை பார்க்க உறவினர்கள் வருவதும், நாம் இரண்டாவுது குழந்தையிடம் அதிக நேரம் செலவிடுவதும், வீட்டில் துணி, பண்டங்கள், பொம்மைகள் என அனைத்திலும் பகிர்ந்துதான் இருக்கிறது என்பதை உணரும் தருவாயில் இருந்து அவர்களுக்குக்கு இளையவன்(ள்) மீது சிறிய வெறுப்பு வர துவங்குகிறது. அதை ஒரு சில குழந்தைகள் நன்றாக வெளிப்படுத்துவார்கள். இளையவனை அடிப்பது, பால் புட்டிகளைமறைத்து வைப்பது, பொம்மைகளை மறைத்து வைப்பது, வாங்கிவரும் தின்பண்டங்களை பெரியவன் உண்ட பின் மீதி இருப்பதையே தருவது, சில தருணங்களில் "நீங்க என்ன அவனுக்கு மட்டும் எல்லாம் செய்யரிங்க, எனக்கு இல்லையா" என்று கேட்டு விடுவார்கள்.வாங்கி வருவதில் முதலில் தனக்கான பொருளை தேர்ந்தெடுப்பது என்பதில் உறுதியாக இருப்பர்.

இவைகள் அனைத்தும் அவர்களின் மீது உங்கள் கவனம் வரவேண்டும், இளையவனின் மீது நீங்கள் கவனம் செலுத்த கூடாது என்பதின் வெளிப்பாடே.

ஒரு சில குழந்தைகள் பெற்றோர் சொல்வதை கேட்டு அதன்படி அமைதியாக இருந்தாலும் அவர்கள் மனதிலும் சிறு நெருடல் இருக்க வாய்ப்பு இருக்கு.

பெற்றோராக அவர்களின் மனதை சந்தோசமாகவும் அதே சமயம் இளையவன் நமது குடும்பத்தில் ஒருவர் என்று தெளிவு படுத்துவது நமது கடமை. "அவள்(ன்) உன் தம்பி(தங்கை), உன்னை போல உன்னுடன் விளையாட வந்தவன்(ள்)" அப்படின்னு சொல்வதெல்லாம் அவர்களை "பகிர்தல்" என்பதையே அவர்கள் மனதில் உறுதி படுத்துகிறது, நாம் இரண்டு குழந்தைகளையும் ஒன்று போல் பார்க்கும் உணர்வை அவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.




இரண்டு பெரிய மெழுகுவர்த்தி அதைவிட கொஞ்ச சின்ன மெழுகுவர்த்தி, அப்புறம் இன்னும் சின்னதா ஒன்னு. நம்ம வீட்டுல எத்தனை நபர்கள் இருக்கிறோமோ அத்தனை மெழுகுவர்த்தி வீட்டில் இருப்பவர்களின் வயது ஏற்ப எடுத்துகிட்டு, பெரிய பையன உட்கார வெச்சு புரியவைக்கலாம். இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் அவனுடன் இருப்பது நல்லது.

அறையில இருக்கற விளக்கை அணைச்சிட்டு, இந்த இருட்டு அறையில உட்காந்திருக்கிறது எப்படி இருக்குன்னு கேளுங்க. சில நேரம் அவகாசம் கொடுத்து, அவர்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றால் நீங்களே விளக்கம் கொடுக்கலாம். அப்படி அவுங்க வேற ஏதாவுது சொன்னா கொஞ்சம் அதைமாற்றி கீழ இருக்குற மாதிரி உங்களுக்கான உணர்வா சொல்லலாம். 

இருட்டா இருக்கறதுனால, யாருக்கும் யாரையும் தெரியல. அம்மா எங்க இருக்கறாங்க, அப்பா எங்க இருக்கறாங்க,  உனக்கு பிடித்த கார், குதிரை பொம்மை கூட எங்க இருக்குதுன்னு தெரியல. இந்த இருட்டுல எனக்கு பயமாவும் இருக்கு. உனக்கும் அப்படிதான் இருக்குன்னு நினைக்கிறேன். இந்த மாதிரி இருட்டுல உட்கார்ந்திருக்கும் போது, கோவமா இல்லைனா என்மேல யாரும் அன்பா இல்லைன்னு நினைக்கும் போது எப்படி தோணுமோ, அப்படி தான் இப்போ எனக்கு தோணுது. எப்போ எங்க இருந்தாவுது வெளிச்சம் வராதான்னு என் மனசு நெனைக்குது. 


"வீட்டுல இருக்கறவங்க எல்லாரையும் அன்புதான் இணைச்சு வெச்சுருக்கு, எனக்கு உன்ன, அப்பாவை ரொம்ப பிடிக்கும், அந்த அன்புதான் நம்ம எல்லாரையும் சந்தோசமா வெச்சிருக்கு, அன்பு இல்லைனா இந்த இருட்டு போல யாருக்கும் யாரையும் தெரியாது, பயமாவும் இருக்கும். அப்போ அன்பு இருந்ததானே வீட்ல எல்லாருக்கும் சந்தோஷம்!!. வெளிச்சமும் அன்பும் ஒன்னுன்னு கற்பனை பண்ணிக்குவோமா?"


பெரிய மெழுகுவர்த்திய பற்ற வெச்சு, "அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணத்திற்கு முன்னாடி,  அப்பாகிட்ட இருக்கற அன்பு இந்த வீட்டை அன்பால வெளிச்சம் கொடுத்துச்சு!!".

இரண்டாவுது பெரிய மெழுகுவர்த்திய கொஞ்சம் தூரமா பற்ற வெச்சு, "கல்யாணத்திற்கு முன்னாடி, அம்மாகிட்ட இருக்கற அன்பு இந்த வீட்டை அன்பால வெளிச்சம் கொடுத்துச்சு!!". இன்னொரு வீடாக அவர்களுக்கு காட்டுங்கள்.

"கல்யாணத்திற்கு அப்புறம் இரெண்டுபேரும் ஒரே வீட்டுக்கு வந்துட்டாங்க, அப்பா அம்மா மீதும், அம்மா அப்பா மீதும் அன்ப பகிர்ந்துக்கிட்டதனால வீட்டுல பாரு இன்னும் அதிக வெளிச்சம் வந்துடுச்சி.இப்ப பாரு வீட்டுல அதிகமா வெளிச்சம் இருக்கா!!?? ஆனா அம்மாகிட்ட இருந்த வெளிச்சம் அப்படியே இருக்கா!!, அப்பா கிட்ட இருந்த வெளிச்சம் அப்படியே இருக்கா!!! நாம பாசத்தையும் அன்பையும் பார்த்துக்கிட்டா அது அதிகமாகுதா!!!"
  

மூன்றாவது சின்ன மெழுகுவர்த்தியை எடுத்து பற்ற வெச்சுக்கிட்டே (மற்ற இரண்டு எரிந்துகிட்டு இருக்குற விளக்குல இருந்தே பற்ற வையுங்க), "இப்போ தான் அழகான குட்டி பையன்(பொண்ணு) வர்றா, அம்மாவோட அப்பாவோடன்னு இரண்டு பேரோட அன்பையும் பாசத்தையும் வாங்கிகிட்டு, இந்த வீட்டுக்கு வந்திருக்கா. எங்க கிட்ட இருக்கற மாதிரியே அன்பும் பாசமும் வந்திடுச்சா!! இது யாரு??" கேட்டா அது அவுங்கதான்னு உணர்ந்து சொல்லுவாங்க. ஆனா எங்ககிட்ட இருக்கிற அன்பு அப்படியேதான் இருக்கு!! ஆனா பாரு வீட்டுல எவ்வளவு சந்தோசம் நிறைச்சிருக்குதுன்னு!!! என்னை உனக்கு நல்லா தெரியுது, அப்பா தெரியிறாரு!!"

  
நான்காவது மெழுகுவர்த்திய பற்ற வெச்சுக்கிட்டே(மற்ற மூன்று  எரிந்துகிட்டு இருக்குற விளக்குல இருந்தே பற்ற வையுங்க) "இப்போதான், நம்ம எல்லாருடைய அன்போட இன்னொரு குட்டி பொண்ணு(பையன்) வரான்! ஆனா பாரு அம்மாகிட்ட, அப்பாகிட்ட, உன்கிட்ட இருந்த அன்பு அப்படியே இருக்கு. ஆனா, குட்டி பையனால(பொண்ணுனால) வீட்டுல இன்னும் சந்தோசம் அதிகமாயிடுச்சு!! அன்பப் பகிர்ந்துகிறதுனால அது இன்னும் அதிகம் தான் ஆகும்!! குறையவே குறையாது, அப்பாவும் அம்மாவும் எப்பவும் உன்னோடு அன்ப கொடுக்க நாங்க காத்துகிட்டு இருப்போம்"  


"இப்ப சொல்லு ,அந்த குட்டி பையனால(பொண்ணால) நமக்கு வீட்டுல சந்தோசம் அதிகம் ஆயிருக்கா இல்லையா? அதனால உனக்கு சந்தோசமா இல்லையா!!!???"


இப்படியே இன்னும் கொஞ்சம் மெழுகு எடுத்து அவர்களுடைய  நண்பர்கள், பக்கத்து வீட்டுக் காரர்கள் வீட்டுல இருந்து வெளியில போகும் போது அன்பா இரு, அதனால எல்லா இடமும் வெளிச்சம் நிறைஞ்சு இருக்குமுன்னு காண்பிக்கலாம்.

கண்டிப்பா இல்லைன்னு சொல்ல மாட்டாங்க..


வீட்டுல எத்தனை பேரு இருக்கிறோமோ அதற்க்கு தகுந்தாற்போல மெழுகுவர்த்தியோட எண்ணிக்கையும் அளவையும் வெச்சுக்கலாம்.  இது ஒரு சிறந்த விளக்கமா இருக்கும். 

இது 4+ வயது இருக்கற குழந்தைகளுக்கு உதவியா இருக்கும். 

இரெண்டாவுது குழந்தை பெருசானத்துக்கு அப்புறம் இதே மாதிரி அவுங்களுக்கும் சொல்லலாம். 

இதை இரண்டு மூன்று முறை செய்யலாம் சிறு இடைவெளி விட்டு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள்.

இதை செய்து காட்டிய பிறகு அவர்களின் செயல், நடத்தைகளின் மாற்றத்தை எனக்கும்  பகிரவும். 
  

Popular posts from this blog

பழக்கப்படுத்தல்

குழந்தையும் ஊடகமும்..

இன்றைய விளையாட்டு