குழந்தையும் ஊடகமும்..

வீடியோ வழியா விஷயங்களை facebook, youtube மாதிரியான சமூக வலைய தளங்களில் போடலாம், அந்த விஷயம் வீடியோவா மக்கள்கிட்டச் சீக்கரம் சேர்ந்திருது. எல்லாரும் எதையும் விடியோவா பார்க்கத்தான் அதிகம் விரும்பிறோம்.எதாவுது வேல செஞ்சுக்கிட்டே பார்க்கலாம். சமூக வலைய தளங்களில் வீடியோ போடுறதுக்கு எதுவும் பணம் கட்ட தேவை இல்ல. நிறைய முறை அந்த விடீயோவை மக்கள் பார்த்திருந்தா அத youtubeல போடுறவங்களுக்கு காசும் youtube கம்பெனிக் கொடுக்குது, அதனால இது இரட்டிப்பு வெற்றி. 



தான் நினைத்தத வீடியோவ பகிரவும், அதனால பணமும் கிடைக்குது. இதனால நிறைய சினிமா படத்தை பற்றிய விமர்சனம், சாப்பிட்டு கடைகள் பற்றிய விமர்சனம், ஊர் சுற்றி பார்க்கும் போது கிடைக்கும் அனுபவங்கள் பற்றிய விமர்சனம், சமையல்குறிப்புகளுன்னு ஒரு நிமிசத்துக்கு 300 மணிநேரத்திற்கான வீடியோ போடப்பட்டுக்கிட்டு இருப்பதாக அவுங்களோட புள்ளிவிவரம் சொல்லுது. 

அந்த வகையில Ryan Toy Review அப்படின்னு ஒரு சேனல் பொம்மைகளை வாங்கிக்கிட்டு வந்து அதை எப்படி விளையாடுறதுன்னு வீடியோ எடுத்துப் போட்டுருப்பாங்க. முதல்ல ஆரம்பிக்கும் போது ஒரு பொழுதுப் போக்கா ஆரம்பிச்சிருக்காங்க, அதுல நல்ல வருமானம் வரவும், செஞ்சுக்கிட்டு இருந்த வேலைய விட்டுட்டு இப்போ இதை மட்டுமே தொழிலா செய்யுறாங்க. போன வருஷம் மட்டும் 2,20,00,000 அமெரிக்க காசு. கிட்டத்தட்ட நம்ம ஊரு காசுக்கு இப்போ இருக்கரபண மதிப்புக்கு 1,56,20,00,000 ரூபாய், youtubeல அதிகமா சம்பாதிக்கும் நபர். 😏

எங்களுடைய சின்னவனுக்கு(4 வயசு) ரேஸ் கார் பொம்மைனா ரொம்ப பிடிக்கும். விளையாடும் போது எப்பவும் மென்மையாக விளையாடுவான். சாலையில காருங்க வரிசையா போகறமாதிரி, கார் பார்கிங்கில நிக்கற மாதிரின்னு பார்க்கவே நல்லா இருக்கும். ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி,அவன்கிட்ட கொஞ்சம் வித்தியாசம் தெரிஞ்சது.  திடீரென கார் இன்னொரு காருடன் மோதிக்குது, அவனே தூக்கி வீசிட்டு அது பறக்குதுன்னு சொல்லறது, மற்றவர்களிடம் பழகும் விதமும் மாறி இருந்தது. அவன் சொல்லறதைத்தான் கேட்கணும், அவனுக்குத்தான் முதலில் பதில் சொல்லனும். அவன் பேசும் போது காரு, அதோட வேகம் அது எப்படி மோதிக்கும், அப்டின்னு அந்த விஷயத்தையே சுத்தி சுத்தி வருவான். அவனிடம் இருந்த மென்மையானா பண்புகள் மிகவும் குறைந்திருந்தது. இராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி, நேரம் கிடைக்கறப்ப எல்லாம் எதாவுது கதைசொல்லறது, யாரு வேணாலும் சொல்லலாம், அப்பவும் கார் மோதுர கதைதான், யார் சொன்னாலும் அதைத்தான் சொல்லனும்கிற அளவுக்கு அவனது சிந்தனைகள் அதன் மீதே இருந்தன.

கார வெச்சு மென்மையாக விளையாட சொன்னோம்!!  எல்லார்க் கிட்டையும் மென்மையாக பழகச் சொன்னோம், மீறிச் செய்யறப்ப தண்டணை கெடச்சுது, அவன் திரும்ப செய்ய கூடாதுன்னா அதான் வழின்னு தோணுச்சு.

ஆனா நிலமை இன்னும் மோசமா போச்சு. எங்களை எந்த வேலையும் செய்ய விடறது இல்ல. அவனும், குளிக்க மாட்டேன், பல்லு விளக்க மாட்டேன், பள்ளிக்கு போக மாட்டேன்னு போராட்டம் தான். ரெண்டு நாளைக்கு நீ எதுவும் செய்யலைன்னா போடான்னு விட்டா சரியாகி விடும்தான். ஆனா நமக்கு மனசு வருமா, அய்யோ புள்ள எதுக்கு ஆகும், வயிறு பத்தி போயிடுமேன்னுதானே தோணும். 

ஏன் இப்படி செய்றான்னு ஒரேக் குழப்பமா இருந்துச்சு, அவன் காலையில இருந்து சாயந்தரம் வரைக்கும் எல்லா விஷயங்களையும் கவனிக்க ஆரம்பித்தோம். டிவி பார்க்கிறப்ப அவுங்களே அவுங்களுக்கு தேவையானத எடுத்து பார்த்துக்குவாங்க. எல்லாமே குழந்தைங்க பார்க்க கூடியதாதான் இருந்தது. எதாவுது குழந்தைகள் பொம்மைகளை வெச்சுவிளையாடுற மாதிரி இருக்கிற நிகழ்ச்சிகளை விரும்பிபார்த்தான். அது கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. அதுல நிறைய கார் ரேஸ், பைக் ரேஸ் விளையாட்டு 'வீடியோ கேம்'ல விளையாடி அதையும் youtubeல போட்டுருக்காங்க. இது எல்லாமே, காரோட கார் மோதிர மாதிரியும், தண்ணீல விழுர மாதிரியும், கார் பறந்து போற மாதிரியும் இருந்துச்சு. இந்தமாதிரி பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து இவனும் அப்படி விளையாடுறான்னு தோணுச்சு.

படமோ, புத்தகமோ படிச்சா அதை மனசுல பதிந்திருக்கும். அன்றாடம் நடக்கும் செயல்களில் ஒற்றுமைப்படுத்திப் பார்ப்பது எல்லோருக்கும் இயல்பானது. எங்க எல்லாம் அது ஒன்றுபடுகிறதோ அங்க எல்லாம் அதன் வார்த்தைகளையோ, செயல்களையோ செய்து பார்கின்றனர். நாம நம்ம வடிவேல் காமிடி பேசுற மாதிரி.

ஒரு விளைவுக்கான காரணத்தை அறிந்து அதனை சரி செய்யாமல் அதனால் ஏற்படும் செயல் மாற்றத்திற்கு தீர்வு என்பது சரியானதாக இருக்காது. அது திருப்பத்திரும்ப வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
டீவி, போன்னு எல்லாமே அவுங்களும் பார்க்கத்தான் ஆசை பாடுவாங்க, நாமளும் அதுக்கு அனுமதிக்கத்தான் செய்வோம். ஆனா சில நிகழ்ச்சிகள் எந்த மாதிரியானத் தாக்கத்தை அவர்கள் மனதளவில் உருவாக்குங்கிறத நாமதான் கவனிச்சுக்கனும்.

அந்த டீவி நிகழ்ச்சியினால் அவனுக்கு சந்தோசமும் இருந்திருக்கிறது, அதனையும் தாண்டி, அதில் வரும் காட்சி அவனை பாதித்திருக்கிறது. அதே சந்தோசத்தை நாம் வேறு சில செயல்களினால் அவனுக்குகிடைச்சாத்தான் அவனுடைய நினைப்பும் மாறும்.

அதனால அதிக நேரம் கதைப்படிச்சி காட்டுறதும், சில சமயம் கதையில் கார் வேகமாக போகும், ஆனா யார்மீதும் மோதாது. சில நேரம் அதிவேகக் கார் அவசர சிகிச்சை வாகனமாகக் கூட மாறிவிடும். ஏன்னா, அது வேகமா மக்களை காப்பாற்றும், இப்படியாக பேச்சுக்களை மாற்றி அவனுடன் சேர்ந்து நாங்களும் எதாவுது படம் வரையறது, விளையாட்டு, வண்ணம் கொடுத்தல்ன்னு வேற மாதிரி அவனுடைய கவனத்தை மாற்றினோம். இதெல்லாமும் அவனுக்கு பிடித்த ஒன்று தான். இப்படியாக அனைத்து இடங்களிலும் மென்மை என்பதை உறுதி படுத்திக்கொண்டே இருந்தோம். அப்புறம் கொஞ்ச நாளுக்கு அப்புறம் வெளில குளுரு குறைஞ்சு விளையாட ஏதுவா இருக்க, வெளியில ரொம்ப நேரம் விளையாடும்போது, அவனிடம் இருந்து அந்த நினைவு விலகி கொண்டே இருந்தது. 

அப்படி ஒரு நாள் விளையாட போகும்போது,

நான்: சிபி உன்னோட ஷூ போடு, நாம வெளியில சைக்கிள் ஓட்டப் போலாம்.
KID 1: I love my White shoes, I love my white shoes…
KID 2: அம்மா, அவன் ‘Pete the cat’ புத்தகத்தில் இருக்கிறப் பாட்டை பாடுறான்.
நான்: மன 'நிம்மதியுடன்'... சிரித்துக் கொண்டோம்…

Popular posts from this blog

பழக்கப்படுத்தல்

இன்றைய விளையாட்டு